ராமநாதபுரம்-காரைக்குடி இடையே இறுதி கட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணி
ராமநாதபுரம்-காரைக்குடி இடையே ரூ.455 கோடி நிதியில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. புதிதாக 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம்-காரைக்குடி இடையே ரூ.455 கோடி நிதியில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. புதிதாக 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சாலை அகலப்படுத்தும் பணி


ராமநாதபுரம் பகுதியில் இருந்து தேவிபட்டினம், சோழந்தூர், ஆர்.எஸ். மங்கலம் வழியாக காரைக்குடி செல்லும் சாலை 7 மீட்டர் அகலத்தில் இருந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விபத்துகளை தடுப்பதற்காகவும் ராமநாதபுரம்-காரைக்குடி இடைப்பட்ட 80 கிலோ மீட்டர் தூரம் இரு வழிச்சாலையை பத்து மீட்டர் அகலத்திற்கு அகல சாலையாக அகலப்படுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.455 கோடி நிதியில் தொடங்கப்பட்டது. 
இந்த பணிகளில் ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி வரையிலான 7 மீட்டரில் இருந்த சாலைகள் 10 மீட்டர் சாலைகளாக அகலப்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டி அகலப்படுத்தப்பட்டு அதில் செம்மண் கொட்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தார் ஊற்றி சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. ராமநாதபுரம்-காரைக்குடி இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சாலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையர் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:-

2 சுங்கச்சாவடிகள்

 ராமநாதபுரம்-காரைக்குடி இடையே நடந்துவரும் இந்த சாலை பணிகளில் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ஒரு ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது. இதைத்தவிர தேவகோட்டை பகுதியில் உயர்மட்ட பாலம் ஒன்றும் ஆர்.எஸ். மங்கலம் அருகே வெண்ணத்தூர் பகுதியில் உயர்மட்ட பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரஸ்தா, சோழந்தூர், சிங்கனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய பாலம் கட்டும் பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டன. ராமநாதபுரம்-காரைக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெண்ணத்தூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்றும் தேவகோட்டை அருகே கோடிக்கோட்டை பகுதியில் சுங்கச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் விரைவாக செல்ல வசதியாக 8 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுங்கச்சாவடிகளை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாலை பணிகள் அடுத்த மே மாதத்துடன் முழுமையாக முடிவடைந்து விடும்.
 இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் ராமநாதபுரம்-காரைக்குடி இடையே புதிய சாலை இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாலும், 2 சுங்கச்சாவடிகள் அமைய உள்ளதாலும் இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments