இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர்



கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிப்பு இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வந்ததாக பேட்டி.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இலங்கையில் இருந்து மேலும் 18 அகதிகள் தமிழகம் வந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

18 பேர் தமிழகம் வந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 13 பேர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினார்கள். அவர்களை கடலோர காவல்படையினர், வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதேபோல் நேற்று காலை இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் புறப்பட்டு ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கிய 5 அகதிகளையும் போலீசார் மண்டபம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். ஒரேநாளில் 5 குடும்பத்தைச் சேர்ந்த 8 ஆண்கள், 7 பெண்கள், 1 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை என 18 பேர் வந்துள்ளனர்.

இந்த அகதிகளிடம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். நேற்று வந்த 18 அகதிகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 60 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் இந்த 18 அகதிகளும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வாழமுடியாத சூழ்நிலை

இலங்கை மன்னார் பகுதியில் இருந்து வந்துள்ள கஸ்தூரி(வயது 29) கூறியதாவது:-

எனது கணவர் கூலி வேலை தான் பார்த்து வருகிறார். இலங்கையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் அங்கு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இலங்கையில் குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒரு டப்பா ரூ.1000-த்திலிருந்து ரூ.1500 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. மண்எண்ணெய் ஒரு லிட்டர் 250 ரூபாய், அரிசி 300 ரூபாய் என அனைத்து பொருட்களுமே விலை உயர்வு தான். குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பவுன் நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு படகுக்கு கொடுத்து நாங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காகவே தமிழகத்துக்கு வந்துள்ளோம் என்றார்.

பொருட்கள் கிடைக்காது

மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஓட்டலில் வேலை பார்த்து வரும் நகுலேஸ்வரன்(40) கூறியதாவது:-

நான் ஓட்டலில் வேலை செய்து வருகிறேன். ஆனால் ஓட்டலுக்கு தேவையான மாவு உள்ளிட்ட எந்த பொருட்களும் கிடைப்பது கிடையாது. 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு புரோட்டாவின் விலை தற்போது ரூ.50 ஆகும். ஒரு டீயின் விலை 100 ரூபாய், ஒரு கிலோ அரிசி ரூ.200, ஒரு கிலோ சீனி ரூ.250, பருப்பு ரூ.400. பணம் இருந்தாலும் கடைகளில் பொருட்கள் கிடையாது. வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாததாலும் குழந்தைகளுடன் உயிரை காப்பாற்றி நிம்மதியாக வாழவே தமிழகம் வந்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

பள்ளிக்கூடம் செல்லவில்லை

இலங்கையிலிருந்து வந்த பள்ளி மாணவர் மான்சன்(15) கூறியதாவது, மன்னார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்து வருகிறேன். கடந்த 5 நாட்களுக்கு மேல் நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இலங்கையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவர்கள் யாரும் வருவது கிடையாது. இந்த ஆண்டு பத்தாவது வகுப்பு தேர்வு எழுத வேண்டும். ஆனால் உணவு பொருட்கள் ஏதும் கிடைக்காததால் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து தமிழகம் வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைைய சேர்ந்த வினோ(17) கூறும்போது, ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட்டு இரண்டு வேளை பட்டினியாகவே இருந்து வந்துள்ளோம், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments