காரைக்குடி -‌சென்னை , செங்கோட்டை தாம்பரம் , ரயில் சேவைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ரயில்வே வாரியத் தலைவருடன் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசு MP‌ நேரில் சந்திப்பு


 இந்திய ரயில்வே வாரியத் தலைவர் திரு வி.கே.திரிபாதி அவர்களை புதுடெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து,  நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கான ரயில் சேவைகளை விரைந்து வழங்குவது குறித்த கோரிக்கை மனுவினை அளித்து   வலியுறுத்தினார்.

கோரிக்கைகள் விபரம்

1. திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர் முழுமையாக நியமிக்கப்படாததால் பகல் நேரத்தில் மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. நிரந்தர கேட் கீப்பர்களை நியமித்து இரவு நேரத்தில் (சென்னைக்கு) விரைவு ரயில்களை இயக்கப்பட வேண்டும். 

2. மீட்டர்கேஜ் காலத்தில் காரைக்குடி- திருவாரூர்- சென்னை மார்க்கத்தில் இயங்கிய, அகலப்பாதை பணி அமைத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட கம்பன் விரைவு ரயில் மீண்டும் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்பட வேண்டும் 

3. முன்னதாக தெற்கு ரயில்வே ஒப்புக்கொண்டு நிலுவையிலுள்ள தாம்பரம் - செங்கோட்டை மற்றும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம்   (வாரத்திற்கு மூன்று முறை) அந்தியோதயா ரயில் சேவையை  உடனடியாக இயக்கிட வேண்டும். 

4. நாகூர், அஜ்மீர் இரண்டும் இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித யாத்திரை மையங்கள் என்பதால் நாகூர் முதல் அஜ்மீர் வரையிலான புதிய ரயில் சேவை இயக்கிட வேண்டும். 

5. நாகப்பட்டினம் முதல் அக்கரப்பேட்டை வரையிலான பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளதால், பொது மக்களுடைய நலனையும்  போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும். 

6. நாகூர் - பட்டினச்சேரி இடையேயுள்ள ரயில்வே கீழ்ப்பாலம் அமைப்பு சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மழைக்காலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. அதை உடன் செப்பனிட்டு சீர் செய்திட வேண்டும். 

7. நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் சரக்கு ரயிலால் தினமும் 1 முதல் 2 மணிநேரம் வரை மூடப்படுகிறது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வியாபாரிகளுக்கும், பயணிகளுக்கும் நேர விரயம் ஏற்படுகிறது. ஆக பயணிகள் செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். 

8. திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி மார்க்கத்தில் அகலப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். பட்ஜெட் உரையின்போதும், பூஜ்ஜிய நேரம் மற்றும் 377-ன் கீழும் பலமுறை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நான் எழுப்பிய முக்கிய பிரச்னையான,  முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் என்னால் முன்மொழியப்பட்ட சந்தைத்தோப்பு, நெய்விளக்கு, ஆறுகாட்டுத்துறை, குரவப்புலம், ராமகிருஷ்ணாபுரம், கொல்லித்தீவு பகுதிகளில் LUB எனப்படும் கீழ்ப்பாலம் அமைக்கும் பணி ரயில்வே நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, உடனடியாக தேவையான நடவடிக்கை எடுத்து, இந்த பணிகளை விரைந்து முடிக்க நேர்மறையான சமிக்ஞையை அனுப்பிட வேண்டும். 

9. தஞ்சாவூர் - நாகப்பட்டினம் மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் கொரடாச்சேரி மற்றும் கீழ்வேளூர் நிலையங்களிலும், திருவாரூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் பேரளம் சந்திப்பில் நிறுத்தப்பட வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments