ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு அரசு ஊழியர்கள் 24 பேரிடம் விளக்கம் கேட்டு கடிதம்; குற்றச்சாட்டை மறுத்து சங்கத்தினர் மனு




புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசு ஊழியர்கள் 24 பேரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெறவில்லை என சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

ரூ.7 கோடி முறைகேடு

மத்திய அரசின் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்ட நிதி உதவி மானியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர், தணிக்கை பிரிவு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் கடந்த 2016 முதல் 2020-ம் ஆண்டு வரையில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் சில இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் நிதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 480 வீடுகள் கட்டப்படாமல் ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கம் கேட்டு கடிதம்

இதற்கிடையில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட அரசு ஊழியர்கள் 24 பேரிடம் இந்த முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் மத்தியில் நேற்று இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் விளக்கம் கேட்டு கடிதம் வந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேற்று மாலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் அவர்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினரும் வந்தனர். மேலும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்து மனு அளித்தனர்.

முறைகேடு நடைபெறவில்லை...

இது தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் 4 தவணைகளாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இது மானிய தொகையாகும். பயனாளிகளுக்கு நேரடியாக பணம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஏற்கனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்தது எங்களுக்கு திருப்தி இல்லை. மீண்டும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அவரும் 4 நாட்களில் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அரசு துறை ஊழியர்கள் மீது எந்த குறையும் இல்லை. இது வேண்டுமென்றே எங்கள் மீது சுமத்தப்பட்டதாக கருதுகிறோம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். நாளை (அதாவது இன்று) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments