அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: ‘‘பெண்கள் நெறி தவறாமல் வாழ உறுதிமொழி ஏற்க வேண்டும்’’ சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘புதுக்கோட்டையில் ஆரம்பத்தில் ஆண்கள் மட்டும் படிக்கக்கூடிய மன்னர் கல்லூரி இருந்தது. இதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் ஆவார். அதன்பிறகு கே.கே.சி. என அழைக்கப்படும் இந்த மகளிர் கல்லூரி கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளை கடந்த இந்த கல்லூரியில் மாணவிகள் உயர் கல்வி பெற்று செல்வது பெருமையாக உள்ளது. ஒரு பெண் உயர்கல்வி பெற்றால், அவர் மட்டுமல்ல ஒரு குடும்பமே முன்னேறும். படித்த பெண்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும். பெண்கள் நெறி பிறழாமல் வாழ்வதற்கு சொந்தக்காரராக இருக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். எந்த நிலையிலும் சமூகத்திற்கு விரோதமான செயலில் குடும்பத்தினர் ஈடுபடமாட்டோம் என உறுதி மொழி எடுக்க வேண்டும். அப்படி பெண்கள் உறுதிமொழி எடுத்து செயல்பட்டால் நாட்டில் குற்றங்கள் இருக்காது. 

எங்களை போன்ற நீதிபதிகளுக்கு வேலை இல்லை. ஒரு நெறி பிறழாது சமுதாயத்தை உருவாக்க முடியும். தேசப்பற்று, மொழிப்பற்றோடு வாழ வேண்டும். தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார். விழாவில் 2 பேருக்கு தங்கப்பதக்கம் உள்பட 1,036 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். விழாவில் மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments