இனி அறந்தாங்கியில் இருந்து நேரடியாக ரயிலில் குறைந்த கட்டணத்தில் கேரளா, குற்றாலம் , வேளாங்கண்ணி டூர் போகலாம்

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் ஏதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையாவது இவ்வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தற்போது எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே ரயில் சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே. வரும் ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12:35 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து முதல் ரயில் இயக்கப்படுகிறது. அங்கிருந்து கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு 5 ஆம் தேதி காலை 5:50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.

நமது வழித்தடத்தில் ஓடவிருக்கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில் அறந்தாங்கி வழியாக அறந்தாங்கி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் வரும் ஜூன் மாதம் முதல் இயங்க இருக்கிறது. 

இந்த ரயில் வாரம் ஒருமுறை ஸ்பெஷல் ரயிலாக முதல் 2 மாதங்களுக்கு இயக்கப்பட்டு பிறகு வாரம் இரண்டு முறை நிரந்தர ரயிலாக இயக்கப்பட இருக்கிறது. 

முக்கிய நகரங்களை மட்டும் குறிப்பிட்ட ரயில் அட்டவணை

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்:

(அனைத்து சனிக்கிழமைகளும் புறப்பட்டு)
 எர்ணாக்குளம் 12.35 (பிற்பகல்)
கோட்டயம் 13.43 
கொல்லம் 16.30 (மாலை 4.30)
செங்கோட்டை 20.00 (இரவு 8.00) 
விருதுநகர் 22.30
காரைக்குடி 1.10 
அறந்தாங்கி 1.50 அதிகாலை
பட்டுக்கோட்டை 02.22 
அதிராம்பட்டினம் 2.40 
திருவாரூர் 4.25 
வேளாங்கண்ணி 5.50 (அதிகாலை)
(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேரும்)

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்:

(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறப்பட்டு)
வேளாங்கண்ணி 18.30 (மாலை 6.30)
திருவாரூர் 20.30
அதிராம்பட்டினம் 21.40 
பட்டுக்கோட்டை 21.57
அறந்தாங்கி 22.44 (இரவு 10.40) 
காரைக்குடி 23.25
விருதுநகர் 02.00
செங்கோட்டை 04.20 (அதிகாலை)
கொல்லம் 8.30 (காலை)
கோட்டயம் 10.33
எர்ணாக்குளம் 12.00 (நண்பகல்)
(அனைத்து திங்கட்கிழமைகளிலும் சேரும்)

இந்த ரயில் மூலம்  அறந்தாங்கியில் இருந்து எளிதில் செல்லக்கூடிய முக்கிய இடங்கள்

1. குற்றாலம் :
குற்றாலம் சொல்வோர் செங்கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.  

2. கொச்சி விமான நிலையம்: 
கொச்சி விமான நிலையம் செல்வோர் (ஹஜ் செல்வோர், கொச்சி வழியாக அரபு நாடு செல்வோர்) எர்ணாக்குளம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மெட்ரோ  ரயிலில் ஆலுவா மெட்ரோ நிலையம் சென்று அங்கிருந்து விமான நிலையம் செல்லலாம்.  அல்லது எர்ணாக்குளம் ரயில்நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு நேரடி பேருந்து வசதிகளும் உள்ளது.  

3. திருவனந்தபுரம் விமான நிலையம்
திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வோர் கொல்லம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாசஞ்சர் ரயிலில் அல்லது பேருந்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லலாம். 

4. தென்மாவட்டங்கள் :
மேலும் தென்மாவட்டங்கள் செல்வார் விருதுநகரில் இறங்கி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் அல்லது பெங்களூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸை பயன்படுத்தி திருநெல்வேலி, நாகர்காவில் செல்லலாம். 

5. முக்கிய சுற்றுலா இடங்கள் : 
தென்மலை சுற்றுலா செல்வோர் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ளலாம். கொல்லம் படகு சவாரி, வர்க்கலா கடற்கரை, எடவா, ஜத்தயு பாறை கற்றுலா செல்வோர் கொல்லம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  குமரகோம் படகு சவாரி செல்வோர், வாகமான் மலை பிரதேசம் செல்வார், மூணார் மலை பிரதேசம் செல்வார் கோட்டயம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா செல்வோர் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். 

6. நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி: 
அதிகாலையில் நமது பகுதியிலிருந்து நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சென்று மாலை வீடு திரும்புவோரும் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம். 

அறந்தாங்கி தொகுதி மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தினால் மேலும் நிறைய ரயில்களை (சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு)   அறந்தாங்கி வழியாக இயக்க வழிவகை செய்யலாம். 

நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு:

அறந்தாங்கி தொகுதி மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மேலும் புதிய ரயிர்களை (சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து) நமது ஊர் வழியாக இயக்க வழிவகை செய்யலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments