மல்லிப்பட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் அதிகாலையில் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் வசித்து வருபவர் ஜெகபர் அலி. இவர், விசைப்படகு வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் விசைப்படகுகளை பழுது நீக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம மனிதர்கள் ஜெகபர் அலியின் வீட்டு கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். 

தப்பியோட்டம்

அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஜெகபர் அலி தனது வீட்டுக்குள் 2 மர்ம மனிதர்கள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். 
உடனே அந்த மர்ம மனிதர்கள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த கத்தி, அரிவாள், கடப்பாரை, ஸ்குரூ டிரைவர் மற்றும் விலை உயர்ந்த கேமரா மற்றும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். 

மோட்டார் சைக்கிள் மாயம்

அதே நேரத்தில் மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவில் வசிக்கும் உணவகம் நடத்தி வரும் அயூப்கான் என்பவர் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. எனவே கொள்ளையடிக்க வந்த மர்ம மனிதர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பிச்சென்றபோது அயூப்கானின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.  அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்தில் பொது மக்கள் கூடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெம்புலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மர்ம மனிதர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்கள், கேமரா ஆகியவற்றை கைப்பற்றி சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார். 
இதுகுறித்து அயூப்கான் அளித்த புகாரின்பேரில் மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சி குறித்து ஜெகபர் அலியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments