கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் கற்றலில் பின்தங்கி உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி எண்ணும் எழுத்தும் இயக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:-

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் மாணவர்கள் கற்றலில் பின்தங்கி உள்ளனர். எனவே 1 முதல் 3-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும் எழுத்தறிவையும் 2025-ம் கல்வியாண்டிற்குள் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குறிக்கோள் நிறைவேற தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

செம்மைப்படுத்துதல்

இதனையொட்டி 1 முதல் 3-ம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி நடைபெறும். எனவே ஆசிரியர்கள் பயிற்சியில் நிறைய கற்றுக்கொண்டு தங்களை செம்மைப்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எளிமையான கற்றல், கற்பித்தல் துணக்கருவிகளுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்களிடம் தேடல் இருக்க வேண்டும். மேலும் காலத்திற்கு சூழலுக்கு ஏற்றார் போல் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன அனைத்து கல்வியாளர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதுநிலை விரிவுரையாளர் முருகன் வரவேற்று பேசினார். முடிவில் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments