வாசிப்பு திறனில் அசத்தும் கறம்பக்குடி இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள்





    இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் ரீடிங் மாரத்தான் போட்டியில் கறம்பக்குடி பகுதி மாணவர்கள் வாசிப்பு திறனில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை ரீடிங் மாரத்தான் போட்டி தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் கோடை விடுமுறையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தக படிப்பை விடுத்து ஆடல், பாடல், உரையாடல், நடனம் என மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இல்லம் தேடி வகுப்புகள் நடைபெறுவதால் கறம்பக்குடி பகுதியில் மாணவர்கள் ஆர்வமுடன் இந்த வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். தன்னார்வ ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இல்லம் தேடி கல்வி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையிலும், தமிழ், ஆங்கில உச்சரிப்புகளை வளப்படுத்தும் நோக்கத்துடனும் பள்ளி கல்வி துறையின் சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் ரீடிங் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் தினமும் பல்வேறு தலைப்புகளில் படங்களுடன் அன்றாட நிகழ்வுகள் குறித்த செய்திகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியே இடம்பெறுகின்றன

 வாசிப்பு திறனில் அசத்தல்

         இந்த வாசகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். இதற்கு புள்ளிகள் (ஸ்டார்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வார்த்தை பிழையின்றி தெளிவான உச்சரிப்புடன் வாசிக்கும் மாணவர்களுக்கு அதிக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்த ரீடிங் மாரத்தான் போட்டி மாணவர்களிடம் உற்சாகத்தையும், வாசிப்பு பழக்கத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் கறம்பக்குடி அக்ரஹாரம் இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று வாசிப்பு திறனில் அசத்தி வருகின்றனர். இதுகுறித்து கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப்பள்ளி இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் கூறுகையில், இந்த போட்டி விடுமுறையை பயன் உள்ளதாக மாற்றி உள்ளது. செல்போனில் அடுத்தடுத்துவரும் வாசகங்களை வேகமாக படிப்பது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. காலையில் 'தினத்தந்தி'யை படித்து பழகி மாலையில் போட்டியில் கலந்துகொள்கிறோம். இதனால் அதிக புள்ளிகள் கிடைக்கிறது என தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments