எந்தவித கட்டணமும் இன்றி 5-ம் வகுப்பு மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் புதிய பயிற்சி திட்டம் இயக்குனர் காமகோடி தகவல்





இந்தியாவிலேயே முதன் முறையாக எந்தவித கட்டணமும் இன்றி 5-ம் வகுப்பு மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் புதிய திறன்வளர்ப்பு பயிற்சி திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தி உள்ளது.

சிந்திக்கும் திறனை வளர்க்கும் திட்டம்

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கணிதம் மூலம் புதுமாதிரியாக சிந்திக்கும் திறனை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்' என்ற பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்டு இதனை உருவாக்கி உள்ளோம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தி உள்ளது. மறைமுகமாக மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக கணித சிக்கல்களுக்கு தீர்வு காணும் முறை தான் இந்த புதிய திட்டம் ஆகும்.

புதிய முயற்சி

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கணித சிக்கல்களை தீர்க்கும் திறன் உண்டு என்ற நினைப்பை போக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அனைத்து மாணவர்களையும் சுலபமாக கணித சிக்கல்களுக்கு தீர்வு காண்பவர்களாக உருவாக்க முடியும். கணித படிப்பில் தர்க்கவியல் தான் அடிப்படை என்பதால் விரிவடைந்து உள்ள தொழில்நுட்ப உலகில் அதன் பயன்பாட்டின் மூலம் பரந்த சிந்தனையை வளர்ப்பது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய முயற்சியில் ஐ.ஐ.டி. இறங்கி உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் பலன்களை அடுத்த சில ஆண்டுகளில் காண முடியும்.

4 நிலையிலான படிப்பு

இந்த திட்டத்திலான படிப்புகள் 4 நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலாவது நிலையில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களும், 2-வது நிலையில் 7-வது வகுப்புக்கு மேல் படிப்பவர்களும், 3-வது நிலையில் 9-வது வகுப்புக்கு மேல் படிப்பவர்களும், 4-வது நிலையில் 11-ம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களும் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்பில் சேர வயது வரம்பு எதுவும் கிடையாது.

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முதல் 2 பிரிவுக்கு தலா 20 மணி நேரமும், அடுத்த 2 பிரிவுக்கு தலா 30 மணி நேரமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

நேரடி தேர்வு

அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் நிலைக்கான வகுப்புகள் தொடங்கும். ஒவ்வொரு நிலைக்கான தேர்வுகள் தேர்வு மையங்கள் மூலம் நேரடியாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தேர்வுக்காக மட்டும் மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கணித கல்வியாளரும், ஆர்யபட்டா கணித அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனருமான சடகோபன் ராஜேஷ் இந்த பயிற்சியை அளிக்க உள்ளார்.

இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments