கட்டுமாவடியில் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கட்டுமாவடி பகுதியில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடர்ந்த தரைப்பகுதி வெளியே தெரிந்தது. மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு கடல்நீர் உள்வாங்குவது மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து கணேசபுரத்தைச் சேர்ந்த மீனவர் தவமணி கூறுகையில், 'கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றுக்கு கொண்டல் காற்று அல்லது இழுவான் கொண்டல் என்று கூறுவார்கள். இந்த காற்று வீசும்போது கரையோர பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் அமாவாசை நாட்களிலும் கரையோரப் பகுதிகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசக்கூடிய காற்றுக்கு கச்சான் காற்று என்று பெயர். 


இந்த காற்று வீசும்போது கரையோர பகுதியில் உள்ள நீரோட்டம் முழுவதும் கடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடல் உள்வாங்கி கரையோர பகுதியில் உள்ள பாசிகளும், சேற்று பகுதிகளும் வெளியே தெரியும். அதேபோன்று பவுர்ணமி நாளிலும் மற்றும் சந்திரன் கிழக்கு பகுதியில் இருக்கும்போதும் கரையோர பகுதிகளில் உள்ள நீரோட்டம் கடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடல் உள்வாங்கும். இந்த சுழற்சி முறையானது காற்று மற்றும் சந்திரனின் நிலையைப் பொறுத்து அமைகிறது. இது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வாகும், என்று கூறினார். இந்நிலையில் நேற்று மாலை கரைப்பகுதியில் நீரோட்டம் அதிகரித்து கடல் மீண்டும் இயல்பு நிலையில் காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments