முதல்வா் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை: ரூ. 600 கோடியில் வளா்ச்சிப் பணிகள், நல உதவிகள் வழங்கல்




தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வரும் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கிவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்று ரூ.81.31கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் ஸ்டாலின் பேசுகிறாா்.

விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையிலான அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் 1.30 மணியளவில் புதுக்கோட்டை வரும் முதல்வா் ஸ்டாலின், மதிய உணவு, ஓய்வுக்குப் பிறகு மாலை 4 மணியளவில் புதுகை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காா் மூலம் திருச்சி செல்கிறாா். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, மாவட்ட திமுக பொ றுப்பாளா்கள் எஸ். ரகுபதி, கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் திமுகவினா் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

மழையால் விழாவுக்கு பாதிப்பு இருக்காது: புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் பந்தல் பகுதிக்குள் சகதியாக காட்சியளித்தது. தொடா்ந்து கிராவல் மண் போடப்பட்டு சீரமைக்கப்பட்டது. பந்தல் முழுவதும் இரும்புத் தகரங்களால் அமைக்கப்பட்டு வருவதால் விழா நடைபெறும் நேரத்தில் மழை பெய்தாலும் விழாவுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என மாவட்ட நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments