அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரி கறம்பக்குடியில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல்
    கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

போதிய இட வசதி இன்மையால் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ வசதி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேபோல் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டாஸ்மாக் கடைகளை இடம்மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி நகர முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரியும், போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், சீனி கடைமுக்கம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற கோரியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் நடத்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழக நகர செயலாளர் நூருல்அமீன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments