நாங்கள் மாமன், மச்சான்! பள்ளிவாசல் திறப்பில் மதங்களை கடந்த நெகிழ்ச்சியான விஷயம்! இதுதான் தமிழ்நாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்து மக்கள் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் பேனரில் இடம்பெற்றிருந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இந்தியாவில் தற்போது மதம் சார்ந்து தற்போது அடிக்கடி பிரச்சனைகள் எழுகின்றன. இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட சில குறிப்பிட்ட நபர்களால் பிரச்சனை உருவாகிறது.


இதனால் முக்கிய நகரங்களில் வன்முறை, கலவரம் நடந்துள்ளன. மேலும் மதத்தை கடந்து அன்போடும், பாசத்தோடு பழகியவர்களுடன் விலகி நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மதங்களை கடக்கும் மனிதநேயம் இது ஒருபுறம் இருந்தாலும் கூட இந்தியா என்பது மதசார்பற்ற நாடு, இங்கு வாழும் அனைத்து மதத்தினரும் ஒன்றே என கூறும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடப்பது உண்டு. இதற்கு எப்போதும் தமிழகம் பெயர் பெற்றுள்ளது. அந்த வகையில் தான் மதங்களை கடந்து மதநல்லிணக்கத்துடன் பள்ளிவாசல் ஒன்றின் திறப்பு விழாவுக்கு இந்து மக்கள் பேனர் அடித்து வரவேற்ற சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. 

இதுபற்றி விபரம் வருமாறு: பள்ளிவாசல் திறப்பு விழா 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மந்திரிப்பட்டினம் அமைந்துள்ளது. இங்கு முஹைதீன் (மஸ்ஜிதுல் அமீன்) என்ற பெயரில் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதன்படி பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த பலர் வருகை தந்திருந்தனர். 

பேனர் அடித்து வரவேற்பு 

முன்னதாக பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வருகை தந்த பொதுமக்கள் வரவேற்பதற்காக சுற்றுவட்டார கிராம மக்கள் பேனர்களை வைத்திருந்தனர். மந்திரிப்பட்டினம் மீனவ கிராமத்தார்கள் மற்றும் திருவத்தேவன் கிராமத்தார்கள் சார்பில் புதிய பள்ளிவாசல் மற்றும் கோவில் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக இந்து மக்கள் சார்பில் வைத்த பேனர்களை கண்டு திறப்பு விழாவுக்கு வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

மாமன், மச்சான்கள் 

இதுகுறித்து விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கையில், "பொதுவாகவே தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிவாசல் திறப்பு விழா, கோவில் விழாக்களை மதம் கடந்து தங்கள் வீட்டு நிகழ்ச்சியைபோல் பொதுமக்கள் எடுத்து நடத்துவது வழக்கம். இது காலம் காலமாக மாமன் மச்சான்களாக பழகிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இடையேயான நடைமுறை. வழக்கமான ஒன்றுதான்" என பெருமையாக கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments