மார்ஃபிங் பண்ணி மிரட்டுவாங்க.. நிம்மதி போயிடும்..ஜாக்கிரதை - டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வீடியோ!




சில கடன் செயலிகள் ஆபத்தானவை, எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டும் புது வித மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான் எண், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி அடாவடியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அதிகமாக புகார்கள் எழுந்து வருகின்றன.

எச்சரிக்கை 

வங்கிகள் பெயரில் அனுப்பப்படும் போலி கடன் வழங்கும் லிங்க்குகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எந்த தனிப்பட்ட தகவல்களையும், ஓடிபி போன்ற ரகசிய எண்களையும் இதுபோன்ற குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகளையும் நம்பி தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து எச்சரிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், "சமீபகாலமாக லோன் ஆப்கள் பெருகி வருகின்றன. அந்த ஆன்லைன் லோன் ஆப்களில் கடன் பெற, உங்கள் புகைப்படத்துடன் அப்ளை பண்ணச் சொல்வார்கள். உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சிலர் பற்றிய தகவல்களை கேட்பார்கள். உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி உங்களிடம் பணம் கறப்பார்கள்.

உங்களுக்கு நிம்மதி போய்விடும். இந்த போட்டோ உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்பமாட்டார்கள். இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் சிக்கவைத்து உங்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. காவல்துறையினர், இந்த செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை முடக்கினாலும், புதிய பெயர்களில் இந்த கடன் செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

நீங்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக சில செய்லிகளை சொல்கிறேன். Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City cash ஆகிய செயலிகள் மோசடியான செயலிகள். இவற்றை ஒருபோதும் டவுன்லோடு செய்து விடாதீர்கள். ஒருவேளை உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் நீக்கி விடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என சைலேந்திர பாபு அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments