திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஜூலை 9-ந்தேதி இடைத்தேர்தல்




    திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்படி கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என்று 498 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன.

நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 510 உள்ளாட்சி பதவிகள் காலியாக இருக்கின்றன.

இடைத்தேர்தல் அறிவிப்பு

இந்த காலியிடங்களுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி நடைபெறும் என்றும், 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடவும், அன்றே வேட்பு மனு தாக்கலை தொடங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வருகிற 27-ந்தேதி மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம். அடுத்த மாதம் 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும்.

கிராம ஊராட்சி தலைவர்

மேலும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் நகர்ப்புற பதவிகள் எதுவும் காலியாக இல்லை. ஆனால், சில ஊரக உள்ளாட்சி பதவிகள் மட்டும் காலியாக உள்ளன. அவற்றுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தமங்கலம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பளுவஞ்சி ஆகிய 2 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்குடி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னங்குடி, புதுக்கோட்டை ஒன்றியத்தில் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவை தவிர தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 436 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

1,041 வாக்குச்சாவடிகள்

வேட்புமனுக்கள் தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செயல், வேட்பு மனுக்களை திரும்பப்பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,022 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் என்று மொத்தம் 1,041 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கென 279 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கென 12 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.

நடத்தை விதிகள்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நேர்வில் தொடர்புடைய மாவட்ட ஊராட்சி வார்டு அடங்கிய ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுவதும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நேர்வில் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முழுவதும், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நேர்வில் தொடர்புடைய கிராம ஊராட்சி முழுவதும் நடத்தை விதிகள் பொருந்தும். இந்த நடத்தை விதிகள் அனைத்து நேற்று முதல் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments