புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையை சுற்றுலா தலமாக்க திட்டம்
    புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

முத்துக்குடா

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் சார்ந்த இடங்கள் ஏராளமாக உள்ளன. இதில் பெரும்பாலான இடங்கள் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குடவறை கோவில்கள், மலைகள் சார்ந்த இடங்கள், சித்தன்னவாசல், திருமயம் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.

கடற்கரை பகுதியான முத்துக்குடாவில் சுற்றுலா தலம் அமைக்க சமீபத்தில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் படகு சவாரி உள்பட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும்.

நார்த்தாமலை

இதற்கிடையில் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்டுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையை சுற்றுலா தலமாக்க திட்டமிட்டுள்ளனர். மலையில் பழமையான விஜய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வருவது உண்டு. இந்த நிலையில் மலையில் ஏறி பொதுமக்கள் சுற்றுலா செல்லும் வகையில், தரைப்பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் பொழுது போக்குகளுடன் கூடிய சுற்றுலா தலமாகவும் அமைக்கவும் ஆலோசித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நார்த்தாமலையில் பெரும் பகுதி மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்களது ஒப்புதல் கிடைக்க வேண்டும். பொதுமக்கள் மலையில் ஏறிச்சென்று பார்வையிடும் வகையில் கைப்பிடிகளுடன் கூடிய பாதைகள் அமைத்து உருவாக்கினால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். நார்த்தாமலையின் அருகே பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் வழிபாடு நடத்த பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா தலமாக உருவானால் அரசுக்கு வருவாய் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் பொழுது போக்கு அம்சமாக ஒரு இடமாக திகழும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments