‘சைபர் கிரைம்’ எச்சரிக்கைத் தொடர் 9 உஷார்... பரிசு அட்டை மோசடிகள்! - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
    
    பிரபல நிறுவனங்களின் பெயரிலான பரிசு அட்டைகளை உடனடியாக வாங்கச்சொல்லி, அல்லது யாருக்காவது வாங்க அனுப்பச்சொல்லி வரும் ‘வாட்ஸ் அப்’ தகவல்கள் அல்லது ‘மெயில்கள்’ குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

‘அமேசான்’, ‘வால்மார்ட்’ போன்ற பிரபல நிறுவனங்களின் பெயர்களிலான பரிசு அட்டை மோசடிகள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன. அதேபோன்று, உங்களுக்கு பெரிய தொகை பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான சேவை கட்டணம் அனுப்பி வைக்குமாறும் சொல்லி ஏமாற்றும் ‘சைபர்’ கிரிமினல்களும் அதிகரித்துள்ளனர். கடந்த வாரம் சண்டிகார் காவல்துறை தலைவர், தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பரிசு அட்டை மோசடியில் ஈடுபடும் ‘சைபர்’ கிரிமினல் குறித்து ‘டுவீட்’ செய்திருந்தார். அதில், “எனது பெயர் மற்றும் ‘டிபி’யை (புகைப்படம்) பயன்படுத்தி, ‘அமேசான்’ ‘கிப்ட்’ கார்டு கேட்கும் இந்த மோசடிக்காரன் உங்களை தொடர்புகொண்டால் ஏமாறவேண்டாம். அவனைப்பற்றி உடனே சண்டிகார் ‘சைபர்’ கிரைம் பிரிவில் புகாரளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியிருந்தார். மோசடிக்கு அவன் பயன்படுத்திய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

கோவையில் தனியார் நிறுவன ஊழியர் ராஷ்மி சமீபத்தில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை பரிசு அட்டை முறைகேட்டில் இழந்துள்ளார். ராஷ்மியின் ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கு அவருடைய தலைமை செயல் அதிகாரியின் ‘வாட்ஸ் அப்’ எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தொடர்புகொண்ட நபர், தான் அனுப்பியுள்ள ‘லிங்க்’கில் இருந்து ‘அமேசான்’ பரிசு கூப்பன்களை வாங்கி உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ராஷ்மி, ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 5 ‘அமேசான்’ பரிசு கூப்பன்களை வாங்கி அந்த எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். பல மணி நேரங்களுக்கு பின், தனது நண்பர்களிடம் இதனை பகிர்ந்துகொண்டபோதுதான் ராஷ்மிக்கு உண்மை தெரியவந்தது. ‘வாட்ஸ் அப்’பில் போலி எண்ணில் தன்னுடைய தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்தை ‘டிபி’யாக வைத்து ஏமாற்றியுள்ளனர் என்பதும், அந்த நபர் அனுப்பிய ‘லிங்க்’ ‘அமேசான்’ போன்று தோற்றமளிக்கும் போலி ‘லிங்க்’ என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ‘சைபர்’ குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மோசடி செய்யப்பட்ட பணத்தை பயன்படுத்த முடியாதவாறு ‘சைபர்’ குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

பரிசு அட்டை மோசடிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘லிங்க்’ பிரபல நிறுவனமான ‘அமேசான்’ பெயரில் அனுப்பப்படும். அதனை ‘கிளிக்’ செய்தால், ‘அமேசான்’ போல தோற்றமளிக்கும் மோசடி வலைத்தளத்திற்கு திருப்பிவிடப்படும். நீங்கள் கவனமாக பார்த்தால், URL (யூ.ஆர்.எல்.) வேறுபட்டது என்பதைக் கண்டுபிடிக்கமுடியும். அதற்கு அவகாசம் தராமல் உடனடியாக ‘கிளிக்’ செய்து பரிசு அட்டை வாங்குமாறு மோசடிக்காரர்கள் உங்களை நிர்பந்தம் செய்வார்கள். நீங்கள் அந்த நேரத்தில் உஷாராக இருக்கவேண்டும்.

அதேபோன்று, “நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் அதிர்ஷ்ட பரிசை வென்றுள்ளீர்கள். அதனை அனுப்பி வைப்பதற்கான கொரியர் கட்டணத்தை மட்டும் செலுத்துவதற்கு, இந்த இணைப்பை ‘கிளிக்’ செய்து உங்கள் ‘டெபிட் கார்டு’ அல்லது ‘கிரெடிட் கார்டு’ விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள்” என்பது போன்ற குறுஞ்செய்திகளை அல்லது ‘இ-மெயில்’களை நீங்கள் பெறக்கூடும். இதுபோன்று ஆசை காட்டி அறிவிக்கப்படும் அந்த அதிர்ஷ்ட பரிசு ஒருபோதும் வருவதில்லை. ஆனால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும்.

“பிரபல சூப்பர் மார்க்கெட் நடத்தும் கணக்கெடுப்பில் பங்குபெறுங்கள்-ஆச்சரியமான பரிசுகளை வெல்லுங்கள்” என்பதுபோன்ற விளம்பரங்கள் உங்கள் ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கோ அல்லது இ-மெயிலுக்கோ வரக்கூடும். இதை ‘கிளிக்’ செய்தால், கணக்கெடுப்பு தொடர்பான சில தகவல்களை கேட்டுவிட்டு, அடுத்து உங்களுக்கு பரிசு அனுப்புவதற்காக உங்களது சுய விவரங்களை கேட்டுப்பெறுவார்கள். உங்கள் ‘பாஸ்வேர்டு’களை திருடி, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தையும் திருடுவார்கள்.

எனவே, பிரபல நிறுவனங்களின் பெயரிலான பரிசு அட்டைகளை உடனடியாக வாங்கச்சொல்லி, அல்லது யாருக்காவது வாங்க அனுப்பச்சொல்லி வரும் ‘வாட்ஸ் அப்’ தகவல்கள் அல்லது ‘மெயில்கள்’ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவை பெரும்பாலும் மோசடியான ‘லிங்க்’கு களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று, இலவச பரிசு அட்டைகளை அல்லது பரிசுப்பொருட்களை தருவதாக ஆசைகாட்டும் ‘ஆன்லைன்’ வலைத்தளங்களை ஒருபோதும் ‘கிளிக்’ செய்யவேண்டாம். இவை உங்களிடம் பணம் பறிப்பதற்காக ‘சைபர்’ கிரிமினல்கள் கை யாளும் மோசடி உத்தி ஆகும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments