மீமிசல் அருகே லாரி மோதியதில் 4 பேர் பலியாகினர்.



        
        ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்தவர் சித்திக். இவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலுக்கு வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சித்திக் ஓட்டினார்.
அவர்கள் மீமிசல் அருகே உள்ள வெளிவயல் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல் ஒரு தனியார் இறால் பண்ணையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பகவான், வேலிமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வம் ஆகியோர் வெளிவயல் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வெளிவயல் பாலத்தில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து மணமேல்குடி அருகே பானாவயலில் இயங்கி வரும் மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வந்த லாரி எதிர்பாராதவிதமாக சித்திக் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, பகவான் மற்றும் ஆரோக்கியசெல்வம் ஆகியோர் மீது மோதியது.




இதில் லாரி மோதிய வேகத்தில் பகவான், ஆரோக்கிய செல்வம், சித்திக்குடன் வந்த ஒருவரும் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சித்திக்கை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக்கும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம்

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகவான், ஆரோக்கிய செல்வம் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் திருவாரூரை சேர்ந்த சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments