உரத்துடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை

உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிக அளவு உரம் வழங்கக்கூடாது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

மொத்த உர விற்பனையாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. சில்லரை உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக உரம் வழங்கக் கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

உரிமம் ரத்து

உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. உரங்களுடன் விவசாயிகளுக்கு தேவையில்லாத இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி ரத்து செய்யப்படும்.

விவசாயிகள் ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments