ஓட்டல் அறை, ஆஸ்பத்திரி அறை வாடகைக்கும் வரி கரண்டி, கத்தி, கிரைண்டருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு






சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) தொடர்பான முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அதிகாரம் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் 47-வது அமர்வு நேற்று முன்தினமும், நேற்றுமாக 2 நாட்கள் சண்டிகாரில் நடந்தது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலங்களின் நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதத்தை மாற்றியமைத்தல், 4 வரி அடுக்குகளை மாற்றியமைத்தல், சில பொருட்களுக்கு வரி விலக்கை ரத்து செய்து வரி விதித்தல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மந்திரிகள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரியை அதிகரிக்கவும், சில சேவைகள் மற்றும் பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கவும் பரிந்துரைத்து இருந்தது.

18-ந் தேதி முதல் அமல்

இந்த பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதனால் பல்வேறு பொருட்களின் வரி அதிகரித்து இருப்பதுடன், சில சேவைகளுக்கு புதிதாக வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இது ஜூலை 18-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதில் முக்கியமாக, பாக்கெட்டில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.

வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக அதிகரிக்கிறது.

இதைப்போல தூய்மை எந்திரம், வரிசைப்படுத்தல் அல்லது தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு வகைகள், அரவை எந்திரம், பவன் சக்கி மற்றும் வெட் கிரைண்டர் ஆகியவற்றின் வரியும் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயருகிறது.

சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்படுகிறது.

காசோலைகள், வரைபடங்கள்

வங்கி காசோலைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அதையொத்த வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் மற்றும் உலக உருண்டைகள் உள்பட அனைத்து வகையான விளக்கப்படங்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. அமலாகிறது.

மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வரையிலான ஓட்டல் அறை வாடகைக்கு 12 சதவீதமும், நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்பத்திரி அறை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) வாடகைக்கு 5 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாடுகளுக்கான பணி ஒப்பந்தங்களுக்கும் 12-ல் இருந்து 18 சதவீதமாக வரி அதிகரிக்கும்.

லாட்டரி, சூதாட்ட விடுதிகள்

அதேநேரம், பேட்டரி பேக் பொருத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. சலுகை அளிக்கப்படும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் எரிபொருள் விலையை உள்ளடக்கிய லாரி மற்றும் சரக்கு வண்டிகளின் வாடகை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.

இவ்வாறு பல பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதம் மாற்றப்பட்டாலும் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டுகள், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கும் முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒத்தி வைத்தது.

இது தொடர்பாக கோவா உள்ளிட்ட மாநிலங்கள் மேலதிக விவரங்களை தாக்கல் செய்ய விரும்புவதாக கூறியுள்ளதால், இந்த ஒத்திவைப்பு நடந்துள்ளதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.

இழப்பீடு நீட்டிப்பதில் முடிவு இல்லை

இந்த கவுன்சில் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இன்றைய (நேற்று) கூட்டத்தில் சுமார் 16 மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக பேசின. இதில் சுமார் 4 மாநிலங்கள், இழப்பீட்டை சார்ந்திராமல் சொந்த காலில் நிற்க விரும்புவதாக தெரிவித்தன. 12 மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்க கேட்டுக்கொண்டன’ என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன், ஆகஸ்டு மாதம் நடைபெறும் அடுத்த கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்று கூறினார்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை சமாளிக்க 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த காலக்கெடு வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் அதிக பாதிப்புகளை சந்தித்ததால் மேலும் 2 ஆண்டுகளுக்காவது ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments