பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்




பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஜெ.ஜெ.கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். மேலும் கல்லூரி கனவு என்ற புத்தகங்களை மாணவர்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு, போட்டித் தேர்வுகள், வணிகவியல், பொறியியல், மருத்துவம், கால்நடை, வேளாண், சட்டம், ஆடை வடிவமைப்புப் படிப்புகள், ஊடகவியல், பாதுகாப்பு போன்ற பிரிவுகள் சார்ந்த படிப்புகளில் உள்ள பிரிவுகள் குறித்தும், உயர்கல்வி பயில்வதற்கான நுழைவு தேர்வுகள் குறித்தும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் குறித்தும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் குறித்தும், உயர்கல்வி பயில்வதற்காக வங்கிகளில் கிடைக்க பெறும் கடனுதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு துறை சார்ந்த வல்லுனர்களால் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிறப்பு முகாம்களில் உள்ளவர்கள் சிறைத்துறையினரால் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக தான் உள்ளார்கள். சிறப்பு முகாம்களில் உள்ளவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் அளிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பாக சட்டத்திருத்தத்தை முதல்-அமைச்சர் உரிய முறையில் மேற்கொள்வார்’’ என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments