அறந்தாங்கி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலை உடனே இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை






சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர் , பட்டுக்கோட்டை அறந்தாங்கி, காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு இயக்குவதாக அறிவிக்கப்பட்ட விரைவு ரயிலை உடனே இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா(தற்போதைய மியான்மர்)நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர்.

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூருக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவியர் சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இதேப்போல இந்த வழித்தடத்தில் காரைக்குடி,பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இதனால் 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இந்த தடத்தில் அகல ரயில்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு, நீண்ட கால தாமதத்திற்கு பிறகு நிறைவடைந்தது. திருவாரூர்-காரைக்குடி இடையே அகலரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் தற்போது வாரத்திற்கு 5 நாட்கள் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் 4ம் தேதி முதல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது.

பல மாதங்களுக்கு முன்பு சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை வரை வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கக்கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை அடுத்து நாடு முழுதும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால்,தாம்பரம்-செங்கோட்டைக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்சேவை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது நாடு முழுதும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை,அறந்தாங்கி, காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கும், ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்களை இயக்கினால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: 

ஒரு காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் தடமாக காரைக்குடி-அறந்தாங்கி-பட்டுக்கோட்டை-திருவாரூர் தடம் விளங்கியது. இந்த தடத்தில் சில ரயில்களே இயக்கப்பட்டபோதிலும், அந்த ரயில்கள் காரைக்குடி, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் படித்த மாணவ,மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கியது.

பின்னர் காரைக்குடி-புதுக்கோட்டை-திருச்சி-சென்னை ரயில்பாதை முக்கியத்துவம் பெற்றதால், காரைக்குடி-அறந்தாங்கி-திருவாரூர் வழித்தடம் கேட்பாரற்று போயிற்று. இதனால்தான் இந்த தடம் அகலரயில்பாதையாக மாற்றி பல மாதங்கள் ஆனபின்பும் இன்னும் இங்கிருந்து மாநில தலைநகரான சென்னைக்கு ரயில்போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் எம்.பிக்களின் தீவிர முயற்சியால் திருவாரூர்-காரைக்குடி அகலரயில்பாதையில் டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர வாரம் ஒருமுறை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதேப்போல ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தாம்பரம்-அறந்தாங்கி-காரைக்குடி-சென்னை-செங்கோட்டை விரைவு ரயிலை உடனே இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்கனவே இயக்குவதாக அறிவித்த தாம்பரம்-செங்கோட்டை விரைவுரயிலையும், காரைக்குடியில் இருந்து வேறு பகுதிகளுக்கு சில ரயில்களையும் இந்த ரயில்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் கோரிக்கையாகும்

நன்றி: அறந்தாங்கி செந்தில்வேலன் தினகரன் செய்தியாளர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments