புதுக்கோட்டை அருகே தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழந்து மாணவன் காயம்..

ஒவ்வொரு முறையும் கட்டடம் புதிதாக கேட்கும் போது கட்டடம் புதுப்பிப்பு என்ற பெயரில் பெயிண்டை மட்டுமே அடித்து சென்றுள்ளனர் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த 4ம் வகுப்பு மாணவன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.  பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி கட்டடத்திற்கு வெளியே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்காவுக்கு உட்பட்ட எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 40 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொடக்கப்பள்ளியின் கட்டடம் சிதலமடைந்து காணப்பட்ட நிலையில், இரண்டு மூன்று முறை பள்ளிக் கட்டிடத்தை பழுது நீக்கும் பணி மட்டும் நடந்துள்ளது.

கடைசியாக கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.1,20,000 மதிப்பில் பள்ளிக் கட்டடம் பழுது நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் இருக்கும் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை இடித்து அப்புறபடுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்‌, மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை என அனைத்து இடங்களிலும் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் பள்ளி கட்டடத்தை புதிதாக கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்ட நாள் முதல் பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்து இருந்ததால் வகுப்பின் போது மட்டும் குறைந்த அளவிலான மாணவர்களை சிதலமடைந்த கட்டத்திற்குள் வைத்து வகுப்புகள் நடத்தி விட்டு பின்னர் வெளியே அமரவைத்து பள்ளி ஆசிரியர்கள் பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல், இன்றும் சிதிலமடைந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடத்திவிட்டு மாணவர்கள் அனைவரையும் சிதிலமடைந்த கட்டிடத்திற்கு வெளியே அமர வைத்திருந்த நிலையில் சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை எதிர்பாராவிதமாக இடிந்து பயங்கர சத்தத்துடன் விழுந்துள்ளது.

இதனையடுத்து அதிலிருந்து வெளியான கல் ஒன்று கட்டடத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த நான்காம் வகுப்பு மாணவன் பரத்தின் தலையின் மீது பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியர்கள் பரத்தை மீட்டு புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் அங்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இடிந்து விழுந்த பள்ளி கட்டடத்தின் மேற்கூரையை கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 2, 3 ஆண்டுகளாக பள்ளி கட்டிடமும் பள்ளி கட்டடத்திற்கு அருகாமையில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடமும் சிதலமடைந்து உள்ளதால் புதிதாக கட்டடம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது பள்ளி கட்டடத்தின்‌ மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்றும் ஒவ்வொரு முறையும் கட்டடம் புதிதாக கேட்கும் போது கட்டடம் புதுப்பிப்பு என்ற பெயரில் பெயிண்டை மட்டுமே அடித்து சென்றுள்ளனர்.

தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது என்றும் பள்ளி கட்டடத்தை புதிதாகக் கட்டிக் கொடுக்கவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும்‌ இதன் பிறகாவது பள்ளி கட்டடத்தை புதிதாகக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவனை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதற்கிடையில் பள்ளியில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments