ஒரே நாளில் மாறிய உத்தரவு.. அரசுப் பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு





சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலேயே எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.








தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளிலேயே வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது நடப்பு ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு வரும் எனவும், 2018ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த இரு வகுப்புகளையும் நிரந்தரமாக்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

கொரோனாவால் தடை 

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. இதனால் அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கண்டனம் 

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. முக்கியமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், அம்மா மினி க்ளினிக்குகளை மூடியது போல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளையும் திமுக அரசு மூடும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

மீண்டும் எல்கேஜி, யுகேஜி 

இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த வகுப்புகளுக்கு தேவையான தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் விரைவாக நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப முதலமைச்சரின் உத்தரவுப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments