ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




    திருமயம் வட்ட மருத்துவமனை ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும் எனவும், ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.603 கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:- புதுக்கோட்டையில் உள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்று, இந்த அரசின் கோட்டையாக இந்த புதுக்கோட்டை மாறியிருக்கிறது.

5 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதி மக்களுக்காக, ஏன், இந்த மாநிலத்தில் உள்ள 234 தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பாடுபட்டு வரக்கூடிய அரசினுடைய முதல்-அமைச்சராக நான் இங்கு வந்திருக்கிறேன். எந்த கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை.

2 அமைச்சர்கள்

அமைச்சர் மெய்யநாதன் அமைச்சரவைக்கு புதியவராக இருந்ததால், அவர் எப்படி செயல்படுவார் என்கிற தயக்கம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் முதல் முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதும், இப்போது ஆட்சி பொறுப்பிற்கு வந்ததற்கு பிறகு தனது துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசுகிறபோது, ஒரு தேர்ந்த அமைச்சராக 2-வது முறையாக அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற அளவிற்கு அவர் அழகாகப் பேசினார். சுற்றுச்சூழல் துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை! இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும் கூட! அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அவர் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது. அமைச்சர் ரகுபதியை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்பட கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் ரகுபதியின் பங்கு இன்றியமையாத பங்காக அமைந்திருக்கிறது. தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.







கருணாநிதியின் மாவட்டமாக இந்த புதுக்கோட்டை மாவட்டம் இருந்த காரணத்தினால்தான், புதிய பஸ் நிலையம், மகளிர் கல்லூரி, சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, குடுமியான்மலை அண்ணா பண்ணை, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதுக்கோட்டை நகரில் பாதாள சாக்கடைத் திட்டம், அரசு மருத்துவமனை மற்றும் ராணியார் மருத்துவமனை புதிய கட்டமைப்புகள் ஆகிய அனைத்தையும் புதுக்கோட்டைக்கு உருவாக்கிக் கொடுத்தார். புதுக்கோட்டை நகராட்சி செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம் ரூ.50 கோடியை செலுத்தி நகராட்சியை கடனிலிருந்து விடுவித்தவர் தான் கருணாநிதி. இப்படி புதுக்கோட்டைக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தவர் கருணாநிதி. இத்தகைய புதுக்கோட்டையை உருவாக்கிய ஆட்சிதான், தி.மு.க.ஆட்சி.

பெண்கள் இலவச பயணம்

கடந்த ஓராண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 7 ஆயிரத்து 463 கோரிக்கை மனுக்களில், 3 ஆயிரத்து 614 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2 லட்சம் எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 170 பயனாளிகளின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4 லட்சத்து 68 ஆயிரத்து 519 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது. 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 4 லட்சத்து 72 ஆயிரத்து 109 பேர் பெற்றிருக்கிறார்கள். 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு தரப்பட்டிருக்கிறது. 968 முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உதவித்தொகை

கொரோனா நோய்த் தடுப்புக்காக 51 ஆயிரத்து 960 நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 12 லட்சத்து 69 ஆயிரத்து 499 பேர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 783 பேர். காவல்துறை சார்ந்த 1,716 நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம், ரூ.85 லட்சத்து 80 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்திருக்கக்கூடிய குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியை 110 குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். 316 கோவில்களில் பணிபுரியும் 316 பூசாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக, ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. கோவில் புனரமைப்புப் பணிக்காக ரூ.1 கோடியே 62 லட்சம் மாவட்டத்திலுள்ள 81 கோவில்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஓராண்டில், 1,254 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 48 வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் 895 நபர்களுக்கு, ரூ.1 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம், கணவரால் கைவிடப்பட்ட 51 பெண்களுக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

கைம்பெண்களுக்கான உதவித்தொகை 844 நபர்களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 26 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 97 நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 963 நபர்களுக்கு பணிக்கொடை ரூ.37 கோடியே 97 லட்சத்து 7 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு திட்டங்களின் மூலமாக பயனடைந்துள்ளார்கள். அந்த வரிசையில்தான் இன்றும் இன்னும் சில முக்கியமான திட்டங்களை நான் இங்கே துவக்கி வைக்கிறேன். ரூ.81 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்றிருக்கக்கூடிய 140 திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், ரூ.10 கோடியே 37 லட்சம் செலவில், 34 முடிவுற்ற திட்டப் பணிகள். நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 12 பணிகள். கறம்பக்குடி பேரூராட்சி வடக்குத் தெரு நியாய விலை கடை கட்டிடம். மருத்துவத் துறை சார்பில் 26 பணிகள். கந்தர்வகோட்டையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம், புதுக்கோட்டையில் இசைப்பள்ளி கட்டிடம். முத்துமாரியம்மன் கோவிலுக்கு அடிப்படை வசதிகள்.பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வு மையங்கள் -கணினி அறைகள்.

அறந்தாங்கியில் நில அளவர் அலுவலகம். புதுக்கோட்டையில் அன்னை சத்தியா நினைவு குழந்தைகள் காப்பகத் திட்டம். அங்கன்வாடி மையங்கள். கோட்டைப்பட்டினத்தில் மீன் உலர் களம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்கள். புதுக்கோட்டையில் செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளம். புதுக்கோட்டையில் தொழில் பயிற்சி வளாகத்தில் தங்கும் விடுதிகள்.

அண்டக்குளத்தில் சித்த மருத்துவ புதிய கட்டிடம். பிராமணவயல் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம். கறம்பக்குடி அரசு கலை கல்லூரியில் வகுப்பறைகள். இலுப்பூர், இடையப்பட்டியில் குடியிருப்புகள். 15 இடங்களில் சிறுதானிய விற்பனை நிலையங்கள் என மொத்தம் ரூ.81 கோடியே 31 லட்சம் செலவில், 140 பணிகள் முடிவுற்று இன்றைக்கு இந்த விழாவிலே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

முத்துக்குடா

ரூ.166 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டிலான 1,399 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முதல் தளத்தில் பார்வையாளர்கள் தங்குவதற்கான சிறப்புக் கட்டிடம். புதுக்கோட்டை நகர் பகுதிகளில், 14 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைத்தல். பல்வேறு பேரூராட்சிகளில் தார்ச்சாலைகள் அமைத்தல். சிறிதும் பெரிதுமான ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில், ரூ.85 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் 1,324 திட்டப் பணிகள். வம்பன் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல்.

துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல். புதிய அங்கன்வாடி மையங்கள் அமைத்தல். பிள்ளைத்தண்ணீர் பந்தலில் கால்நடை மருந்தகக் கட்டிடம் அமைத்தல். ஆதனக்கோட்டை, பேரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுதல். துலையனூர், கீழாத்தூர் ஆகிய 2 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கட்டுதல். கொடியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம். முத்துக்குடா கடற்கரையில் படகுசவாரி அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்களாகும். தனிநபர்கள் பயன் பெறக்கூடிய வகையில் 48 ஆயிரத்து 868 பயனாளிகளுக்கு ரூ.370 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

புதிய மீன்பிடி துறைமுகம்

இத்திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் பின்வரும் திட்டங்களை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், ரூ.10 கோடி செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் ரூ.15 கோடி செலவிலும், ஜெகதாப்பட்டினம் மீன் இறங்குதளம் ரூ.15 கோடி செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த 4 கண்காட்சி அரங்குகளை அவா் பார்வையிட்டார். விழா பந்தல் வழியாக நடந்து சென்று மக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் பொதுமக்களை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்தார்.

வரவேற்பு

முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விட்டு புதுக்கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கலெக்டர் கவிதாராமு, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் செந்தில், நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மணமேல்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் உள்பட பலர் வரவேற்றனர். புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் மதியம் 2 மணிக்கு வந்து அவர் தங்கினார். மாலையில் அரசு விழா முடிவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் சிவகங்கை வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில் ரோஜா இல்லம் அருகே முதல்-அமைச்சர் கான்வாய் வந்த போது மு.க.ஸ்டாலினிடம் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் மனு கொடுக்க முயன்றார். கூட்டமாக இருந்ததால் தடுமாறிய அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் மனுவை வழங்கினார். கணவர் இறந்த நிலையில் வேலைவாய்ப்பு கோரி மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments