புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வினை 2,967 பேர் எழுதினர் முதன் முதலாக மையங்கள் அமைக்கப்பட்டதால் வரவேற்பு





புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வினை 2,967 பேர் எழுதினர். முதன் முதலாக மையங்கள் அமைக்கப்பட்டதால் பெற்றோர், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

‘நீட்’ தேர்வு

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பு நீட் தேர்வின் போது மையங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை. பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வந்தனர்.

இந்த ஆண்டு தேர்வு மையம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வரவேற்பு தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு எழுத 3 ஆயிரத்து 172 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் நேற்று காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர்.

அணிகலன்களை கழற்றினர்

புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பகல் 11.30 மணிக்கு மேல் தேர்வர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது அடையாள அட்டை, நுழைவுச்சீட்டு, புகைப்படம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என சரிபார்த்து மையத்திற்குள் அனுப்பினர். மேலும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளின் படி மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவிகள் பலர் தாங்கள் அணிந்திருந்த கம்மல், கொலுசுகள் உள்ளிட்ட அணிகலன்களை கழற்றி தங்களது பெற்றோரிடம் கொடுத்து அனுப்பினர். மேலும் சுடிதார் அணிந்து வந்தவர்கள் தங்களது துப்பட்டாவையும் கழற்றி கொடுத்தனர். இதேபோல மாணவர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து தேர்வர்களை மையத்திற்குள் அனுமதித்தனர்.

முக கவசம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வர்களுக்கு கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டன. மேலும் என்.95 ரக முக கவசம் வழங்கப்பட்டது. தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து சென்றனர். தேர்வு மையத்திற்குள் பகல் 1.30 மணிக்குள் மாணவ-மாணவிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் வரை அவர்களது பெற்றோர் வளாகத்தில் காத்திருந்தனர். தேர்வு மையத்திற்குள்ளே செல்லும் போது தங்களது குழந்தைகளை பெற்றோர் வாழ்த்தி அனுப்பினர். அதேபோல தேர்வு எழுதி முடித்து வந்ததும் தேர்வு எழுதியதை ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

2,967 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வை எழுத 3 ஆயிரத்து 172 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 967 பேர் எழுதினர். 205 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அறந்தாங்கி

அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments