ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு களைகட்டும் மொய் விருந்து விழாக்கள்




ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு மொய் விருந்து விழாக்கள் களை கட்டி வருகிறது.

மொய் விருந்து விழாக்கள்

        ஆனி முடிந்து ஆடி மாதம் நேற்று தொடங்கியது. ஆடி என்றாலே நினைவுக்கு வருவது, ஆடி காத்து. ஆடி காத்தில் அம்மியே பறக்கும் என்பார்கள். மேலும் அதற்கு அடுத்தபடியாக இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் மொய் விருந்து விழாக்களே. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையோர கிராமங்களில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்து விழாக்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவ்விழாக்களை கஜா புயல் மற்றும் கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகவே முறையாக நடத்த முடியாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே, அதாவது ஆனி மாதத்திலேயே மொய் விருந்து விழாக்கள் நடைபெற தொடங்கி தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதிகளில் எங்கு திரும்பினாலும் இதே பேச்சாக இருந்து வருகிறது. மொய்விருந்து விழாவை சமாளிக்க பலரும் தங்களது தங்க ஆபரணங்களை அடகு கடை மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்தும், தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து மாதம் மற்றும் ஆண்டு கணக்கில் வட்டிக்கு பணத்தை வாங்கியும் மொய் விருந்து தேவையை சமாளித்து வருகின்றனர்.

புத்துணர்ச்சி பெறும்

கடந்த 2017-ம் ஆண்டு மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் தற்போது, மொய் விருந்து தேவையை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் மொய் விருந்து விழாவின் மூலமாக, கிடைக்கும் பணத்தை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் வரக்கூடிய மொய் விருந்து விழாக்களை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சற்று கவனக்குறைவாக இருந்து அனாவசியமாக மொய் விருந்து பணத்தை செலவு செய்தால், இதிலிருந்து மீள முடியாமல் போவதோடு மரியாதை குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளாகவே விவசாயம் சார்ந்த தொழில்களால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருவதால் மொய் விருந்து விழாக்கள் சற்று தொய்வை சந்தித்து வருவதாகவும், இது நிரந்தர தீர்வு இல்லை என்றும், இனி வரும் காலங்களில் மொய் விருந்து விழாக்கள் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments