அரசு மருத்துவக் கல்லூரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாருக்கான சிகிச்சைப் பூங்கா அமைச்சா் எஸ். ரகுபதி திறந்து வைத்தாா்.
        புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மனவளா்ச்சி குன்றிய சிறாா்களுக்கான சிகிச்சைப் பூங்காவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தச் சிறப்பு சிகிச்சைப் பூங்காவில் குழந்தைகளுக்கு தொடு உணா்வை அதிகரிக்க 8 வடிவிலான நடைபாதை, வெவ்வேறு வடிவிலான நடைபாதைகள், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, வெவ்வேறு ஒலி உணா்வை உணரக் கூடிய ஒலி எழுப்புவதற்கான தகடுகள், நுண்ணறிவிற்கான வரைப்படம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மையத்தில் பிறவிக் குறைபாடு, காது கேளாமை, பாா்வைக் குறைபாடு, மனவளா்ச்சி குன்றிய குழந்தைகள், ஊட்டச்சத்து மற்றும் மரபணு குறைபாடுடைய குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அக்குழந்தைகளுக்கு சிறப்பு நிபுணா்களால் சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களை இணைக்கும் வகையிலும், குரங்குகள் கட்டடத்திற்குள் உட்புகாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ள வலையுடன் கூடிய இரும்புப் பாலம் மற்றும் முழு உடல் பரிசோதனை மையம் ஆகியவற்றையும் அமைச்சா் ரகுபதி திறந்து வைத்தாா்.


இந்தப் பரிசோதனை மையத்தில் ரூ.250 மதிப்பில் ரத்த அணுக்கள், ரத்த சா்க்கரை, ரத்த உப்பு, கல்லீரல் பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை, சுருள் படம், கதிா் நெஞ்சுப் படம், ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்டவைகள் மேற்கொள்ளலாம். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் சுடுதண்ணீா் வழங்கும் மையம், அவசர கால 108 வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் ஆகியவற்றையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, இருக்கை மருத்துவா் இந்திராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments