புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் தயாராக இருந்தும் கடலில் அமைக்கும் பணி தாமதம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் தயாராக இருந்தும் கடலில் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. கப்பலில் அதனை கொண்டு செல்ல அனுமதி கிடைக்காததால் தாமதமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன்வளம்

தமிழகத்தில் கடல் பகுதியில் மீன்வளத்தை பெருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கடலில் விடுதல், செயற்கை பவளப்பாறைகள் அமைத்தல், கடல் தாழைகளை நட்டு வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான மணமேல்குடி அருகே கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்பட அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மீன் வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி செலவில் 5,760 எண்ணிக்கையில் செயற்கை பவளப்பாறைகள் வட்ட வடிவிலும், முக்கோண வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவை சிமெண்டாலான பவளப்பாறைகள் ஆகும்.

8 இடங்கள்

கடலில் இயற்கையாகவே பவளப்பாறைகள் காணப்படும். ஆனால் அந்த பவளப்பாறைகள் குறைந்து வருவதால் செயற்கை முறையில் பவளப்பாறைகள் போன்று தயாரித்து வைக்கப்படுகிறது. இந்த பவளப்பாறைகளை கடலில் குறிப்பிட்ட ஆழத்தில் கொண்டு சென்று ஆங்காங்கே வைக்கப்படும். இந்த பவளப்பாறைகளில் மீன்கள் தஞ்சம் அடைந்து இனப்பெருக்கம் செய்து, மீன்குஞ்சுகள் பெருகும். இதன் மூலம் மீன்வளம் பெருகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், முத்துனேந்தல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், குமரப்பனவயல், முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பணிகள் தாமதம்

இந்த நிலையில் தயாராக உள்ள செயற்கை பவளப்பாறைகளை கப்பலில் வைத்து கொண்டு சென்று கடலில் ஆங்காங்கே கயிறு கட்டி இறக்கி வைக்கப்படும். இந்த நிலையில் கரையில் இருந்து செயற்கை பவளப்பாறைகளை கப்பலில் கடலில் கொண்டு செல்வதற்கான அனுமதி கிடைக்காமல் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் கடலில் இயற்கை சூழல் அவ்வப்போது மாற்றமடைந்து வருகிறது.

கடலில் காற்று வேகமாக வீசுதல், புயல் சின்னம் உருவாகுதல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என நிலவுவதால் செயற்கை பவளப்பாறைகளை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கப்பல் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் வந்தடையும். அதில் செயற்கை பவளப்பாறைகளை எடுத்து செல்லப்படும். இந்த அனுமதி கிடைக்காத காரணத்தால் செயற்கை பவளப்பாறைகள் தயாராக இருந்தும் கடலில் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. வருகிற ஜனவரி மாதத்தில் கடலில் அமைக்கும் பணி நடைபெறலாம் என சம்பந்தப்பட்ட துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments