மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற கோரி த.மா.கா.வினர் கோரிக்கை விடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் த.மா.கா. மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனுவில் ‘‘தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நலிந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங் களுக்கு முன்பு தான் சொத்துவரி, வீட்டு வரியை உயர்த்தியது. தொடர்ந்து மின்சார கட்டண உயர்வு அறிவிப்பு பொதுமக்களை பாதிக்கும். எனவே மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.

கேந்திர வித்யாலயா பள்ளி

இதேபோல அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் அளித்த மனுவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே வரத்து வாரி வாய்க்காலின் மேல் பகுதியில் அமைக்கப்படும் பூங்கா பணிகளை நிறுத்த வேண்டும்.

புதுக்கோட்டை நகரில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் கூறப்பட்டிருந்தது. கூட்டத்தில் மொத்தம் 328 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி அறிவுறுத்தினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments