ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 பேர் கைது


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

விசைப்படகு 

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் மதன் (வயது 26) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அதே ஊரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் மகன் மெர்வின் (24), பாலகிருஷ்ணன் மகன் வசந்தகுமார் (20), சர்க்கரைப்பிள்ளை மகன் சத்யராஜ் (35), மதியழகன் மகன் மகேந்திரன் (18) ஆகிய 5 பேரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

5 மீனவர்கள் கைது 

இவர்கள் அனலை தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் இலங்கையில் உள்ள பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

விடுதலை செய்ய வேண்டும் 

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டு செயல்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும். மேலும் கைதான 5 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், என்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments