கறம்பக்குடியில் வரத்துவாரி பாலத்தை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்; 15 பேர் படுகாயம்




    கறம்பக்குடியில் வரத்துவாரி பாலத்தை உடைத்து கொண்டு தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு தனியார் பஸ் ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கொல்லைகாடு கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ் கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்று பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று கறம்பக்குடி பெரியகுளத்தின் வரத்து வாரி பாலத்தை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகள் வலியால் அலறி துடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இடையாத்தி கிராமத்தை சேர்ந்த முத்துராசு, அவரது மனைவி ராணி, நம்பன்பட்டி சந்திரா, ஆண்டி குளப்பன்பட்டி சின்னப்பெண்ணு, கெண்டையன் தெரு நாகம்மாள், கருப்பகோன் தெரு பாக்கியம், வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்த விஜயலெட்சுமி, கொன்னம்பட்டி பன்னீர்செல்வம், சூரக்காடு காளியம்மாள், கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த கருப்பையா அவரது மனைவி வீரம்மாள், ஆலங்குடியை சேர்ந்த அஞ்சலிதேவி, கவிதா, ஆத்தியடிபட்டி மயில்வாகனன் அவரது மகன் கணேசன் ஆகிய 15 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments