பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை




பேருந்தில் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது


இது போக்குவரத்து துறை சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது ;

சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக புகார்கள் வருகின்றன.

பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தைக் குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது.

நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை எனப் பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ளக் கூடாது. வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களைப் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தைப் பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துநரின் சமிக்ஞை கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில் தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும்.

ஓட்டுநர் இடது பக்கவாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் யாரேனும் ஏறுகிறார்களா? அல்லது இறங்குகிறார்களா? என்பதைக் கவனமாகப் பார்த்து, அதன் பிறகு தான் பேருந்தை இயக்க வேண்டும். மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக, பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

மேலும், கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகள் இறங்கத் தயார்ப் படுத்தவும் வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments