வெளிநாடுகளில் வசிப்போர் உறவினர்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி அனுப்ப அனுமதி




புதுடில்லி,-வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இன்றி பணம் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறி பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வெளிநாடு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் 1 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது இந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கட்டுப்பாடு இன்றி பணம் அனுப்பலாம்

. இந்த தொகை அதிகரிக்கும்போது அது தொடர்பான விபரங்களை 30 நாட்களுக்குள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என விதி இருந்தது. இந்த கால அவகாசம் தற்போது 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கான பதிவு மற்றும் அனுமதி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாள் அவகாசம், தற்போது 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நிதி பெறுவோர், எவ்வளவு நிதி பெறப்பட்டது, நிதி அளித்தவர் விபரம், தேதி உள்ளிட்ட விபரங்களை ஒவ்வொரு காலாண்டும் மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இனி, நிதியாண்டின் துவக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விபரங்களை தாக்கல் செய்தால் போதும்.வங்கி கணக்கு, நிதி பெறுபவர் பெயர், முகவரி மாற்றம் போன்ற விபரங்களை 15 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி, 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments