புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் புத்தகம் வாசித்த மாணவ-மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் புத்தகம் வாசித்த மாணவ-மாணவிகள்

புத்தகத்திருவிழா

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும், புத்தகத்திருவிழா குழு தலைவருமான கவிதாராமு உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பிலான புத்தகத்திருவிழா நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, கீழக்குறிச்சி, பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, ஆரியூர், குளவாய்ப்பட்டி, மதியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்தது. விழாவில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற இப்புத்தக விழாவில் மாணவர்கள் கையில் புத்தகம் ஏந்தி பாடங்களை வாசித்தனர். இதில் அப்பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்து வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் சரவணன் தலைமையில் மாணவிகள், ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர். இதேபோல் செவ்வாய் பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்க புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷப்னம் தலைமை தாங்கினார். இதில் அறிவியல் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களைப் பற்றி பல்வேறு புத்தகங்களில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை மாணவிகள் புத்தகங்களில் இருந்து எடுத்து அதை வாசித்து தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொண்டனர். மேலும் மாணவிகளிடம் குறைந்து வருகின்ற வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த துரையரசன், ரஹ்மத்துல்லா, சின்ன ராஜா, ஆசிரியர்கள் ஜெயக்குமார், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் விழிப்புணர்வாக புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு கீரமங்கலம், செரியலூர், காசிம்புதுப்பேட்டை, கொத்தமங்கலம், குளமங்கலம், சேந்தன்குடி, நகரம், பனங்குளம், மேற்பனைக்காடு உள்பட சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நேற்று புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சியில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 550 பேர் கலந்து கொண்டு நூலக புத்தகங்களை வாசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் விஜய மாணிக்கம், மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ஆகியோர் செய்திருந்தனர். இதில் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மைய நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments