புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுது பார்தல் மற்றும் பயணிகள் நிழற்குடை தேவை பூர்த்தி செய்ய கோரிக்கை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதானதால் நோயாளிகள், பார்வையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பிற மருத்துவமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருவது உண்டு. உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் உள்ளது. இதில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது.

முதல் தளத்தில் இதய பிரிவு, இதய தீவிர சிகிச்சை பிரிவு, செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகம், மருத்துவ சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. 2-வது தளத்தில் மூட நீக்கியல் பிரிவு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வார்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வார்டு, மனநல பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன.


லிப்ட் பழுதால் அவதி

இதேபோல 3-வது தளத்தில் சிறுநீரக சுத்திகரிப்பு பகுதி, பொது மருத்துவ பிரிவு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வார்டுகள், மார்பக நோய் பிரிவு, காசநோய் பிரிவு, 4-வது தளத்தில் பொது அறுவை சிகிச்சை பிரிவு, கைதிகள் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு, கண் சிகிச்சை பிரிவும், 5-வது தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவுகளும் இயங்கி வருகிறது. இந்த 5 தளத்திற்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், செவிலியர்கள் சென்று வர படிக்கட்டுகள் வழி தனியாக உள்ளது. மேலும் லிப்ட் வசதியும் உள்ளது.

இதில் 4 லிப்ட்டுகள் உள்ளதில் 2 லிப்ட்டுகள் மட்டும் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. ஒரு லிப்ட் டாக்டர்களுக்கு மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொரு லிப்ட்டு இயக்கப்படாமல் உள்ளது. நோயாளிகளுக்காக இயக்கப்படும் 2 லிப்ட்டுகளும் தனித்தனியாக உள்ளது. இதில் ஒரு லிப்ட் தரைத்தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வரை நோயாளிகள், பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அருகில் உள்ள லிப்ட் பழுதின் காரணமாக இயக்கப்படாமல் இருப்பதால் வேறு வழியின்றி நோயாளிகள் காத்திருந்து லிப்டில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.


பயணிகள் நிழற்குடை தேவை

நோயாளிகள், பார்வையாளர்கள் நலன் கருதி பழுதடைந்த லிப்ட்டை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மற்றொரு லிப்ட் டாக்டர்களுக்கு மட்டும் எனக்கூறி இயக்கப்படாமல் உள்ளது. அந்த லிப்ட்டையும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பஸ் நிறுத்த பகுதியில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லாததால் ஒரு மரத்தடியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் பயணிகள் காத்திருந்து பஸ் வரும் போது பயணிக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை வசதியும் அமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments