அறிவிப்பு வந்தும் கிடப்பில் போடப்பட்ட திட்டம்: அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனை உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசு தலைமை மருத்துவமனை உருவாவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தலைமை மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் உள்ளன. அதில் ஒன்று புதுக்கோட்டை, மற்றொன்று அறந்தாங்கி ஆகும். நகராட்சி பகுதியான இங்கு பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்ட பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதற்கான அரசு ஆணை இன்னும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்கள் கட்ட நிதி ஓதுக்கப்பட்டு உள்ளது.

டாக்டர்கள் பற்றாக்குறை

இந்த நிலையில் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனை உருவாவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது கடந்த வருடங்களில் இந்த மருத்துவமனையில் பிரசவத்தின் போது இறப்பு என்பதே இல்லை என்ற அளவில் உள்ளது. மருத்துவமனை தொடர்பாக பல்வேறு கோரிக்கை உள்ளது. அதாவது மருத்துவமனைக்கு மனநல மருத்துவர், பிரேத பரிசோதனை செய்யக்கூடிய டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அறந்தாங்கியை சுற்றி 300 கிராமங்கள் உள்ளன. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன. தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. மற்றொன்று சுப்பிரமணியபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்கு வெளியூர் செல்ல போதுமானதாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர்.

கேண்டீன் வசதி தேவை

மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளி, வெளிநோயாளிகள் உணவு சாப்பிட பெரிதும் சிரமப்படுகின்றனர். கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் அரசு ஆவின் பால் நிறுவனம் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உயர்ரக சிகிச்சை கிடைக்க வசதியாக மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: தினத்தந்தி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments