பிச்சாவரம், பள்ளிக்கரணை, கரிக்கிலிக்கு கிடைத்தது சர்வதேச அங்கீகாரம்!






சென்னை : தமிழகத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை, சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.




உலக அளவில், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான மாநாடு, 1971ல் ஈரான் நாட்டில், ராம்சார் நகரில் நடந்தது. மாநாட்டில் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு அடிப்படையில், சதுப்பு நிலங்களை பட்டியலிட முடிவானது.இந்தியாவில் இதுவரை, 49 இடங்கள் சர்வதேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படும் புதிய இடங்கள் குறித்த பட்டியலை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்டார்.அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கடலுார் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதையடுத்து, சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழக பகுதிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்:

சென்னையில், வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரையிலான, 1,482 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், 190 வகை பறவைகள் வந்து செல்கின்றன

பிச்சாவரம்:

கடலுார் மாவட்டம், பிச்சாவரத்தில், 2,800 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என்ற சிறப்பு பெற்றது. இங்கு, 41 குடும்பங்களை சேர்ந்த, 177 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. சூழலியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணியரின் சொர்க்கமாக இப்பகுதி திகழ்கிறது

கரிக்கிலி:

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதை ஒட்டிய சிறிய நீர் நிலையாக அறியப்பட்ட கரிக்கிலி, தற்போது பறவைகள் சரணாலயமாக வனத்துறையால் மேம்படுத்தப்பட்டுள்ளது. வேடந்தாங்கலுக்கு வரும் வலசை பறவைகள், கரிக்கிலிக்கு வராமல் செல்வதில்லை.

பயன் என்ன?

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:எப்போதும் இல்லாத வகையில், ஒரே சமயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இடங்களின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவை, சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பார்வைக்கு வரும்.நீராதார பகுதிக்கான தன்மையை தொடர்ந்து பராமரிப்பது உறுதி செய்யப்படும்.

சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களால் மாசுப்படுத்தும் நடவடிக்கைகள் தடுக்கப்படும்.தமிழக அரசு மட்டுமின்றி, மத்திய அரசும், சர்வதேச அளவிலான அமைப்புகளும், இவற்றின் மேம்பாட்டுக்கு நிதி வழங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments