புதுக்கோட்டை கலெக்டரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் ட்விட்டர் பதிவு.. பின்னணி என்ன??
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.


அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.


 
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை பாராட்டி, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, மகாபலிபுரம் பூந்தேரி பகுதியில் வைத்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, இதன் தொடக்க விழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதே போல, செஸ் போட்டிக்காக மாவட்ட நிர்வாகங்களும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு ஊக்குவித்து வந்தது. அந்த வகையில், சதுரங்க காய்கள் உயிர் பெற்று செஸ் போர்டில் போரில் ஈடுபடுவது போல, நாட்டுப்புற மற்றும் தற்காப்புக் கலைக் கூறுகளை ஒருங்கிணைத்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

மிகவும் வித்தியாசமான வகையில், செஸ் போட்டியை வைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இந்த வீடியோவையும் இயக்கி இருந்தார். இந்நிலையில், இந்த செஸ் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தனது கேப்ஷனில், "சூப்பர். புதுக்கோட்டை கலெக்டர் திருமதி கவிதா ராமு இந்த வீடியோவை இயக்கியதாக அறிகிறேன். நமது கற்பனையில் சதுரங்க காய்கள் உயிரிப்பிக்கின்றன. மேலும், இந்த போட்டி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற நம்பகத் தன்மையையும் இது கொண்டு வந்துள்ளது. பிராவோ!" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments