மின் கட்டண உயர்வு பரிந்துரை- பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார்கள், கருத்துக்களை தெரிவிக்கலாம்


கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.
இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயருகிறது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50-ம், 300 யூனிட்வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம் உயர்த்தப்படுகிறது.

இதே போல் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டு வரை மின் நுகர்வு, செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது- குடியரசு துணைத் தலைவர்
தமிழக மின்வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி தர கோரும் மனுவை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமீபத்தில் தாக்கல் செய்தது.

இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம் மின் கட்டண மனுக்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவற்றின் மீது பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அடுத்த 30 நாட்களுக்குள் அதாவது ஆகஸ்டு 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் அனைவரின் கருத்துக்களுக்கும் உரிய பதில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதன்படி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின்www.tnerc.gov.in மற்றும் மின் வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணைய தளங்களில் மின் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றை மக்கள் படித்து பார்த்து ஆலோசனை மற்றும் கருத்துக்களை ஆகஸ்டு 17-க்குள் ஆணைய செயலர் மற்றும் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலருக்கும் தபாலில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபாலில் அனுப்ப காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இணையதளத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியை மின்வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.

இதன் வாயிலாக கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.

அந்த பக்கத்தின் கடைசியில் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் 'லிங்க்' உள்ளது. அதில் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டதும், அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்.

பிறகு அந்த பக்கத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம். இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

தற்போது பலரும் செல்போன்களை பயன்படுத்துவதால் அதிலும் மின்வாரிய இணையதளத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments