காங்கயம் அருகே கோர விபத்து:பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை




    காங்கயம் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் மீது கார் மோதல்

திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் மாலை 3.45 மணிக்கு திருப்பூர் - தாராபுரம் சாலையில் கொடுவாய் காக்காபள்ளம் பகுதியில் வந்தது. அப்போது எதிரே தாராபுரத்தில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பில் மோதியதோடு, எதிரே வந்து கொண்டிருந்த பஸ் மீதும் பயங்கரமாக மோதியது. இதற்கிடையில் விபத்துக்குள்ளாகி இருந்த பஸ்சின் பின் பகுதியில் மற்றொரு காரும் லேசாக மோதியது.

4 பேர் பலி

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சின்னாபின்னமாகியது. காரின் என்ஜின் கழன்று தனியாக விழுந்தது. அது போல் பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. பஸ்சின் முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த கோவை நீலாம்பூரைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 27), முருகேசன் (36), மகேஷ்குமார் (33) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வெற்றிச்செல்வம் (38), சுஜித் (34), கிஷோர் குமார் (35) ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வெற்றிச்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுஜித், கிஷோர் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் கொடுவாய், காக்காப்பள்ளம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பஸ்சில் பயணம் செய்த 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஊதியூர் போலீசார் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்த கார் மற்றும் பஸ்சின் பாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங் சாய் மற்றும் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments