தஞ்சை மாவட்டத்தில், 14 இடங்களில் அமைகிறது: கடல் வளத்தை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் மனோராவில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்




தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் கடல் வளத்தை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மனோராவில் இந்த திட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

அலையாத்தி காடுகள்...

அலையாத்தி காடுகள், கடலின் முகத்துவாரங்களில் இருக்கும். ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள். கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அலையாத்தி காடுகள் என்பவை கடலோர உப்பு தன்மையை தாங்கும் திறன் கொண்ட தாவரங்களாகும்.

தஞ்சை மாவட்டத்தில் வெண்கண்டல், சுரபுன்னை, தில்லை, தீப்பரத்தை ஆகிய 4 வகை அலையாத்தி மர வகைகள் உள்ளன. இயற்கையாக ஆற்று கழிமுக துவாரங்களில் இவை வளர்ந்து உள்ளன. இவை கஜா புயல் வீசியபோது அங்குள்ள மக்களை பாதுகாத்துள்ளன. எனினும் அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி கஜா புயலின்போது சேதமடைந்தன.

கடல் வளம் பாதுகாப்பு

மேலும் அலையாத்தி காடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை இழுத்து பூமியில் சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தஞ்சை மாவட்டத்தில் மீன், நண்டு மற்றும் இறால் போன்றவை இயற்கையாக உற்பத்தியாகி, மீனவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க இந்த மரங்கள் உதவுகின்றன. கடல் வளத்தை பாதுகாப்பதில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்காற்றுகிறது.

14 இடங்களில் அமைகிறது

தஞ்சை மாவட்டத்தில் கீழதோட்டம் பகுதியில் அலையாத்தி காடுகள் உள்ளன. அதேபோல் பிற இடங்களிலும் அலையாத்தி காடுகளை வளர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை வளர்க்க உகந்த இடங்களாக மனோரா உள்ளிட்ட 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாவட்ட வன அலுவலகம், கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து அலையாத்தி காடு வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மனோராவில்...

இந்த திட்டத்திற்கான தொடக்கமாக மனோரா கிராமத்தில் சுரபுன்னை மரக்கன்றுகளை கலெக்டர், நட்டு வைத்தார். பிறகு கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள சுரபுன்னை காடுகளையும், அலையாத்தி நர்சரி வளர்ப்பு பணிகளையும் படகில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் அலையாத்தி காடுகளை வளர்க்கும் விதமாக அதற்கு தேவையான 13 ஆயிரம் அலையாத்தி செடிகள் வளர்க்கும் பணி கீழத்தோட்டம் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் வரை இந்த செடிகள் வளர்க்கப்பட்டு, வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளால் இந்த செடிகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும். வெண்கண்டல், சுரபுன்னை, தில்லை, தீப்பரத்தை போன்ற அலையாத்தி காட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, அவை தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments