கொரோனாவால் நலிவடைந்த குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம்




கொரோனாவால் நலிவடைந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கடன் உதவி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு (2022-23) செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் 1 மற்றும் 2 என்ற 2 கூறுகளை உள்ளடக்கியது.

1-ம் திட்டத்தின்படி 2020-21 மற்றும் 2021-22 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது சட்டப்பூர்வ வாரிசுகள் மூலமாகவோ ஏற்கனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதே போன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்குவது, வேறு ஏதேனும் தொழிலை தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மூலம் நிதி உதவி பெறலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். எந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். இவ்வுதவி பெற பயனாளி 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராகவும், குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம். 2020-க்கு முன்பு அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவிடலாம்

2-ம் திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட எந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 23.3.2020-க்கு பின்னர் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கலுக்காக எந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிடலாம். இத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments