புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நிறைவு:ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்

    புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் 5-வது புத்தக திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசுகையில், ‘‘புத்தக திருவிழாவில் கடந்த 10 நாட்களில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. 1 லட்சம் மாணவ-மாணவிகள், 1 லட்சம் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வையிட்டுள்ளனர். கோளரங்கத்தை 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்’’ என்றார். விழாவில் 10 படைப்பாளர்களுக்கு கலை இலக்கிய விருதுகளை வழங்கி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், ‘‘ நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி படிக்கும்போது அறிவு விசாலப்படுகிறது. நல்லவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டுவிடலாம். அப்படித்தான் புத்தகங்களை பார்க்க வேண்டும். கல்வி கற்பது அடிப்படை உரிமை. எந்த நூலையும் படிக்கக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இதைத்தான் படிக்க வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என மக்களைக் கட்டுப்படுத்துவது பாசிசம். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கருத்துரிமையை விட்டுத் தர மாட்டோம். கருத்துரிமையை யார் தடுத்தாலும் எதிர்த்துக் கேட்போம்’’ என்றார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார். நிகழ்ச்சியில் சின்னதுரை எம்.எல்.ஏ. புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன், வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments