சென்னையில் மாநகர பஸ் மோதி வழிகாட்டி பெயர் பலகை விழுந்து படுகாயம் அடைந்த புதுக்கோட்டை வாலிபர் சாவு




சென்னையில் மாநகர பஸ் மோதி வழிகாட்டி பெயர்ப்பலகை விழுந்து காயம் அடைந்த புதுக்கோட்டை வாலிபர் இறந்தார்.

பெயர் பலகை விழுந்தது

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி அதிவேகமாக வந்த மாநகர பஸ், ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது சாலையோரம் இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத தூணில் மோதியது. இதில் பெயர் பலகையோடு ராட்சத தூண் சரிந்து சாலையின் இருபக்கமும் விழுந்தது.

இதில் அந்த வழியாக கிண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மகமாயிபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 30) என்பவர் தலையில் பெயர் பலகை விழுந்ததால் படுகாயம் அடைந்த அவர், சுய நினைவின்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மினிவேன் ஓட்டி வந்த மதுரவாயலை சேர்ந்த ஜான்பீட்டர் (43) என்பவரும் படுகாயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த சண்முகசுந்தரம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஸ் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரத்துக்கு திருணமாகி மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஓரிரு மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ரகுநாத்தை கைது செய்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments