பட்டுக்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்





பட்டுக்கோட்டை ரெயில்வே வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரெயில் போக்குவரத்து

திருவாரூர்- காரைக்குடி ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டதால் முன்பு ரெயில்வே கேட் இருந்த பகுதி அகற்றப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை 24-வது வார்டு பூமல்லியார் குளம், அண்ணாநகர், பாரதிநகர், நரிக்குறவர் காலனி, சந்திரசேகர் நகர், சீனிவாசன் நகர், லெட்சுமி நகர், ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தொழிலாளர்கள், இந்த பகுதியை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.


சாலை மறியல்

ரெயில்வே துறை சுரங்கப்பாதை அமைக்க ஆணை பிறப்பித்து வேலை தொடங்கும் நேரத்தில் மாநில அரசு அனுமதி வழங்காமல் இருப்பதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பெரியார் சிலை அருகில் மக்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர் நேரில் வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போராட்டம் நடத்தியவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு ரெயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments