புதுகை பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?
    பொதுமக்களின் அவசரத் தேவைக்காக புதுகை நகரில் உள்ள பழைமையான அரசு மருத்துவமனையை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் பொது அலுவலக வளாகத்துக்கு அருகே 1871-இல் நகரப் பொது மருத்துவமனை (டவுன் ஜெனரல் ஹாஸ்பிடல்) தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு, 1974-இல் புதுக்கோட்டை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. பிறகு, டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனை எனப் பெயா் சூட்டப்பட்டது.

அதன்பிறகு, புதுக்கோட்டை நகரிலிருந்து 7 கி.மீ., தொலைவில் முள்ளூா் கிராமத்தில் 2016-இல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 127 ஏக்கா் பரப்பளவில் மருத்துவக் கல்லூரியும் மருத்துவனையும் 2017 முதல் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவக் கல்லூரி வந்த பின்னா், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அறந்தாங்கி பகுதிக்கு மாறிவிட, நகரின் பழைமையான அரசு மருத்துவமனை காலிக் கட்டடங்களாக மாறியது.

தற்போதைய நிலவரப்படி மாவட்ட மனநலத் திட்ட மையமும், காசநோய்ப் பிரிவு அலுவலகம் மற்றும் ஊரக நலப்பணிகள் - குடும்ப நலப் பிரிவு அலுவலகமும் மட்டும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் அவசரத் தேவைக்கு, புறநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளதால், நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுநல ஆா்வலா்கள் தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பதால், அமைச்சா் மா. சுப்பிரமணியன் இந்த மருத்துவமனை வளாகத்தை நேரில் பாா்வையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். ஆனால், எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விழுப்புரம் மக்களின் கோரிக்கையை ஏற்று நகரில் உள்ள மருத்துவமனையிலேயே அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவு தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. அண்மையில், கரூரிலும் இதேபோன்ற கோரிக்கை எழுந்தபிறகு, அமைச்சா் செந்தில்பாலாஜியின் முயற்சியால், பழைய அரசு மருத்துவமனை ரூ. 20 கோடியில் புனரமைத்து செயல்படுத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் எவ்விதப் போக்குவரத்துநெரிசலும் இல்லாத, விசாலமான கட்டட வசதியைக் கொண்டுள்ள இம்மருத்துவமனை வளாகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments