6 மாதமாக வேலை வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




    கறம்பக்குடி அருகே 6 மாதமாக வேலை வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்

கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி ஊராட்சியில் சுமார் 950 பேர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களாக பதிவு செய்து வேலை பார்த்து வருகின்றனர். ஊராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, வரத்து வாரிகளை சீரமைப்பது, ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. இதனால் இந்த வேலையை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பணியாற்றி வந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

மேலும் ஊராட்சியில் எந்த மராமத்து பணியும் நடைபெறாததால் சாலைகள் நீர்நிலைகளில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. குளங்களுக்கு செல்லும் வரத்துவாரிகளும் தூர்ந்துபோய் உள்ளன. இதுகுறித்து அந்த ஊராட்சி பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை பிலாவிடுதியில் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலை கேட்டு கோஷம் எழுப்பினர். தொழிலாளர்களின் மறியலால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 7 நாட்களில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments