புதுக்கோட்டை தேர் விபத்து: பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்




புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்தில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. தேர் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.

தேர் விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என பக்தர்கள் தரப்பிலும், பா.ஜ.க.வினரும் கூறி வந்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன் கூடுதல் பொறுப்பாக பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் பணியை கவனிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அடுத்த வாரம் புதுக்கோட்டை வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த விசாரணைக்கு பிறகு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments